முதலமைச்சர் கோப்பை போட்டியில் குண்டு, ஈட்டி, வட்டு எறிதலை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி
மதுரை: முதலமைச்சர் கோப்பை போட்டியில் குண்டு எறிதல், ஈட்டி எறிதலை சேர்க்கக் கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரை சொக்கலிங்க நகரைச் சேர்ந்த வெங்கடாசலம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தடகள போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு குண்டு எறிதல், ஈட்டி எறிதல் பயிற்சி அளித்தேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு தடகள பிரிவில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் இடம் பெற்றிருந்தன. கடந்த 4 ஆண்டுகளாக தடகளப் பிரிவில் இந்த விளையாட்டுகளை நீக்கிவிட்டனர். எனவே, 2025-26ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டு எறிதல் ஆகிய போட்டிகளையும் சேர்த்து நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், போட்டிகளில் விளையாட்டுகளை சேர்ப்பது என்பது அரசின் முடிவாகும். மனுதாரரின் கோரிக்கை இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அதே நேரம் குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளை போட்டிகளில் சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிப்பதை இந்த நீதிமன்றம் தடுக்காது என உத்தரவிட்டுள்ளனர்.