முதல்வர் மாற்றம் தொடர்பாக கட்சி தலைமை முடிவுக்கு நானும் டி.கே.சிவகுமாரும் கட்டுப்படுவோம்: முதல்வர் சித்தராமையா உறுதி
பெங்களூரு: முதல்வர் மாற்றம் தொடர்பாக கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதை நானும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரும் பின்பற்றுவோம் என்று முதல்வர் சித்தராமையா கூறினார். கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. டி.கே.சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு எம்எல்ஏகள் பெங்களூருவில் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சென்றுள்ள முன்னாள் எம்பியும் சட்டமேலவை உறுப்பினருமான பி.கே.ஹரிபிரசாத், நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளார்.
இது குறித்து சிக்கபள்ளபுராவில் முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘ஆட்சி தலைமை மாற்றம் என்பது நாங்கள் எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. தலைமை இருக்கும்போது, நாங்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. கட்சி மேலிடம் 5 ஆண்டு முழு பதவி காலம் நிறைவு செய்ய வேண்டும் என்று அனுமதி வழங்கினால் அதை ஏற்று கொள்வேன். ஆட்சி தலைமை மாற்றம் செய்ய விரும்பினால் அதையும் ஏற்று கொள்வேன். முதல்வர் மாற்றம் விஷயத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு இறுதியானது. அது எந்த முடிவாக இருந்தாலும் நானும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் ஏற்று கொள்வது கடமை’ என்றார். முதல்வர் கூறியது குறித்து சிவகுமாரிடம் கேட்டபோது, முதல்வர் கூறிய கருத்துக்கு மறுப்பு கருத்து எதுவுமில்லை. நாங்கள் அனைவரும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் தான். இதில் முதல்வர் சொன்னதை வேதவாக்காக எடுத்து கொள்கிறேன் என்றார். இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரசில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மல்லிகார்ஜுன் கார்கே, இன்று டெல்லி செல்வதின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.