தேவர் குருபூஜையில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை
அவனியாபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்மாவட்டங்களில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இன்றிரவு 7.30 மணியளவில் மதுரைக்கு வருகிறார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை மதுரையில் இருந்து கிளம்பி சாலை மார்க்கமாக கோவில்பட்டி மற்றும் தென்காசி பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்கிறார்.
கள ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு நாளை இரவு மதுரை திரும்பும் முதல்வர், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். இதைத் தொடர்ந்து 30ம் தேதி காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் முதல்வர், அங்கிருந்து சாலை வழியாக ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் செல்கிறார்.
அங்கு நடைபெறும் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜையில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பகல் 1.30 மணியளவில் மதுரை வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
* துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகிறார்
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பதவியேற்ற பிறகு முதன்முறையாக இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் கோவை வருகிறார். கோவை, திருப்பூரில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் நாளை இரவு மதுரை வருகிறார். இரவு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்து இரவு மதுரையில் தங்குகிறார். 30ம் தேதி காலை மதுரையில் இருந்து கிளம்பி பசும்பொன் சென்று தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார். அங்கிருந்து கிளம்பி மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.