முதல்வர் மு.க.ஸ்டாலினின் லண்டன் ஜெர்மனி பயண விவரங்கள்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் லண்டன் ஜெர்மனி பயண விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி கிளம்பும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 8ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை ஈர்க்க உள்ளார். இந்த நிலையில், தேதி வாரியாக அவரது பயண விவரம் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள, 5ஆம் முறையாக வெளிநாடு செல்கிறார். இந்த முறை லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் செல்ல உள்ளார்.
ஆகஸ்ட் 30: முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி நாட்டுக்குக் கிளம்புகிறார். ஆகஸ்ட் 31: ஜெர்மனியில் உள்ள அயலக அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார். செப்டம்பர் 1: ஜெர்மனியில் இருந்து லண்டன் செல்கிறார். செப்டம்பர் 2 அல்லது 3: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்முனைவோர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
செப்டம்பர் 4 அல்லது 5: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். செப்டம்பர் 6: லண்டனில் உள்ள தமிழர் நல வாரியம் நடத்தும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். செப்டம்பர் 7: லண்டனில் இருந்து சென்னை கிளம்புகிறார். செப்டம்பர் 8: அதிகாலையில் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றார். 2023ஆம் ஆண்டு மே மாதம் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.
அதேபோல 2024ஆம் ஆண்டு ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முறையே 8 நாட்கள் மற்றும் 17 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்று, முதலீடுகளை ஈர்த்து வந்தார். இந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில், வெளிநாட்டு பயணங்கள் மூலம் 18,398 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி, தேர்தல் பணிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.