முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் புதிய சாதனை; தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடம்
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்தபடி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு 2024-25ம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது என பாராட்டப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு முதல்வர் மு.கஸ்டாலின் 2021ல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி நிறைவேற்றி வரும் புதுமையான திட்டங்கள்தான் காரணம்.
அதன்படி,
- 700 கோடி பயண நடைகளுக்கு மேல் மகளிர் பயன்பெறும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்.
- 4.95 லட்சம் கல்லூரி மாணவியர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்.
- 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம்.
- 1.15 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 அள்ளி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.
- 4 கோடி மக்களுக்கு மேல் தொற்றா நோய்களுக்கு மருத்துவம் வசதி, ஐ.நா. அமைப்பு பாராட்டிய மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.
- ரூ.660 கோடியில் 95.97 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் இல்லம் தேடி கல்வித் திட்டம்.
- 2 லட்சத்திற்கு மேலான ஏழை, எளியோர் வீடு கட்ட தலா ரூ.3.50 லட்சம் வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம்.
- ரூ.648.12 கோடியில் 10,96,289 உயிர்களை காத்துள்ள இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்.
- 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்து, 3,28,391 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற உதவியுள்ள நான் முதல்வன் திட்டம்.
- 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் குவிந்த 10,14,368 கோடி முதலீடுகள். இவற்றின் வாயிலாக பெருகும் 32,04,895 வேலைவாய்ப்புகள்.
முதலிய திட்டங்களே இன்று பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் - புதிய உச்சம்! எனும் வெற்றிக்கு அடித்தளங்கள். இப்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சங்கள் அடைந்துவரும் வேளையில் மற்றும் ஒரு மணிமகுடத்தை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு சூட்டியுள்ளது. நேற்று முன்தினம் (21ம் தேதி) நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1,14,710. இந்திய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழ்நாடு ரூ.1,96,309 பெற்று இந்தியாவிலேயே 2வது இடம் என அறிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொடர்ந்து அடைந்துவரும் வளர்ச்சிகள் சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு புதிய திட்டங்களை வழங்காத நிலையிலும் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய நிதிகளை அளிக்காத நிலையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறந்த நிர்வாகத் திறன்களாலும், சீரிய தொலைநோக்கு திட்டங்களாலும் தமிழ்நாடு தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு சான்றுதான் நாடாளுமன்றத்தில் ஒன்றிய இணையமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.