ஐகோர்ட் வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு தலைமை நீதிபதி மரியாதை
சென்னை: அம்பேத்கரின் 69வது நினைவு நாளையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அம்பேத்கரின் 69வது நினைவு தினம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவரது சிலைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், வி.லட்சுமி நாராயணன், கே.ராஜசேகர், பி.வேல்முருகன் உள்ளிட்ட நீதிபதிகளும், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், நூலகர் வி.எம்.ரகு, மூத்த செயற்குழு உறுப்பினர் ஏ.ரமேஷ், அகில இந்திய அம்பேத்கர் சீட்ஸ் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஏற்காடு அ.மோகன் தாஸ், செயலாளர் எம்.வி.சதீஷ், மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது