கும்பமேளா நெரிசல், மணிப்பூருக்கு குழு அமைக்காத பாஜக, கரூருக்கு மட்டும் அனுப்புகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.176 கோடி மதிப்பிலான 109 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், "நெஞ்சை அள்ளும் அழகிய கடற்கரை மாவட்டம் ராமநாதபுரம். மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் மண் ராமநாதபுரம். எத்தனையோ பெருமைகளுக்கு சொந்தமான மாவட்டம் ராமநாதபுரம். 1974ம் ஆண்டு தமிழ்நாடு உப்புக்கழகத்தில் ராமநாதபுரத்தில்தான் கலைஞர் தொடங்கினார். ஒரு காலத்தில் ராமநாதபுரம் என்றால் தண்ணீர் இல்லாத காடு என்று சொல்வார்கள். அந்த நிலையை மாற்றிக் காட்டியது திமுக அரசுதான். ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. கூட்டுக்குடிநீர் திட்ட பணியின் போது மாதத்துக்கு 3 முறையாவது ராமநாதபுரம் வந்து ஆய்வு நடத்தினேன்.
ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 87,500 பேர் பயன்பெற்று வருகின்றனர். விரிவாக்கப்பட உள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 2.95 லட்சம் பேர் பயன்பெறப் போகின்றனர். ரூ.30 கோடியில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும். திருவாடாணை, ஆர்.எஸ். மங்கலம் முக்கிய கண்மாய்கள் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்படும். கடலாடி வட்டத்தில் உள்ள கண்மாய் ரூ.2.6 கோடியில் சிக்கல் கண்மாய் ரூ.2.3 கோடியில் மறுசீரமைக்கப்படும். பரமக்குடியில் ரூ.4.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும். ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றப்படும். ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும். கமுதியில் விவசாயிகள் நலன் கருதி ரூ.1 கோடியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
தமிழ்நாடு மீனவர்களை காக்க ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவை தரமாட்டோம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டாமா?. தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா?.பிரதமர் பெயரில் உள்ள ஒன்றிய அரசின் திட்டத்துக்கும் திமுக அரசுதான் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் வன்மத்தை காட்டுகிறது ஒன்றியஅரசு. யாருடைய ரத்தத்தையாவது குடித்து உயிர்வாழத் துடிக்கும் ஓட்டுண்ணியாகத் தான் இருக்கிறது ஒன்றிய அரசு. கும்பமேளா நெரிசல், மணிப்பூருக்கு குழு அமைக்காத பாஜக, கரூருக்கு மட்டும் அனுப்புகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால்தான் கரூருக்கு எம்.பிக்கள் குழுவை அனுப்பியது ஒன்றிய அரசு..அதிமுகவும் பாஜவுடன் கூட்டணி வைத்து அடிமை சாசனம் எழுதிகொடுக்க தயாராக உள்ளனர்.தங்கள் தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான வாஷிங் மெஷின்தான் பாஜக. கூட்டணிக்கு ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்டை எடப்பாடியிடம் கொடுத்துள்ளது பாஜக. 3வது முறை ஆட்சிக்கு வந்ததும் ஆர்எஸ்எஸ் பாதையில் வேதத்துடன் நடைபோடுகிறது பாஜக அரசு. திராவிட மாடல் ஆட்சிதான் அடுத்து வரும் தேர்தலிலும் வென்று தொடரும். "இவ்வாறு பேசினார்.