மக்களின் பாதுகாப்பில் இரவு, பகலாக பாடுபடும் காவலர்களின் நலனை பேணி பாதுகாத்து வருகிறோம்: திட்டங்களை அடுக்கி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டப்பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் பேசும் போது, ‘‘காவலர் நலனுக்காக அரசு செய்துள்ள திட்டங்கள் என்ன?’’ என்று கேட்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பதில் அளித்தார். அவர் கூறியதாவது: தமிழ்நாடு காவல் துறையில் தி.மு.க. ஆட்சியில்தான் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. காவலர் சேம நல நிதியின் கீழ் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழங்கும் நிதியினை 4 லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ் இருக்கின்ற உறுப்பினர் உயிரிழந்தால், வழங்கப்படக்கூடிய நிதி 50 ஆயிரம் ரூபாய் என்றிருந்தது, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 10ம் வகுப்பு தேர்வில் முதல் 10 ரேங்கில் வருகின்ற காவலர்களுடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி பரிசு தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, முதல் ரேங்குக்கு வழங்கப்பட்ட ரூ.6,500 என்பது ரூ.13,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் ரேங்குக்கு வழங்கப்பட்ட ரூ.4,000 என்பது ரூ.9,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் ரேங்குக்கு வழங்கப்பட்ட ரூ.2,500 என்பது, ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நான்காவது முதல் பத்தாவது ரேங்க் வரை இருக்கக்கூடியவர்களுக்கு ரூ.2,000லிருந்து ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், 12ம் வகுப்புத் தேர்வில், முதல் 10 ரேங்குக்குள் வரக்கூடிய காவலர்களுடைய பிள்ளைகளுக்கு பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு, குறிப்பாக முதல் ரேங்க் வருகிறவர்களுக்கு ரூ.7,500லிருந்து, தி.மு.க. ஆட்சியில் ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் ரேங்குக்கு ரூ.6,500லிருந்து ரூ.11,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் ரேங்குக்கு ரூ.3,500 லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 4 முதல் 10 ரேங்க் வரை இருக்கக்கூடியவர்களுக்கு ரூ.2,500 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதிக மதிப்பெண் பெறக்கூடிய 100 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு உயர் கல்வி வழங்கக்கூடிய திட்டம், 200 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், அவர்களுக்கு 25,000 ரூபாய் என்றிருந்த உயர் கல்வித் தொகை 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. போலீஸ் உணவு சலுகைகள் ஊர்க் காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. காவலர் முதல் ஆய்வாளர் வரை 2,249 பேருக்கு சிறைத் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. தலைமைக் காவலர் வரை இருக்கின்றவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இப்படி காவலர்களுக்கு அறிவிக்கப்பட்ட நலத் திட்டங்களையெல்லாம் இன்னும் நான் பட்டியலிட முடியும். மக்களின் பாதுகாப்பில் இரவு, பகலாக பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய, அயராது உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய காவலர்களின் நலனை பேணி பாதுகாத்து வருகிறோம்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.