தலைமை தேர்தல் கமிஷனருடன் திரிணாமுல் எம்பிக்கள் சந்திப்பு
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வரும் நிலையில், திரிணாமுல் கட்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட எம்பிக்கள் குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில்,’ எஸ்ஐஆர் பணி முற்றிலும் திட்டமிடப்படாமல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சுமார் 40 நிமிடங்களில் தங்களது 5 கேள்விகளை எழுப்பினர்.
அதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பேசினார். எங்கள் ஐந்து கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என்றார். மஹூவா மொய்த்ரா எம்பி கூறுகையில்,’ எஸ்ஐஆர் செயல்முறையுடன் தொடர்புடைய 40 பேரின் மரணங்களின் பட்டியலை தலைமை தேர்தல் கமிஷனில் திரிணாமுல் எம்பிக்கள் குழு வழங்கியது. இருப்பினும், ஆணையம் அதை வெறும் குற்றச்சாட்டுகள் என்று நிராகரித்தது’ என்றார்.