தென்காசி மாவட்டத்திற்கு அடுத்த மாதம் வருகை இரட்டை குளம் கால்வாய் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
*பழனி நாடார் எம்எல்ஏ தகவல்
சுரண்டை : தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரட்டை குளம் கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என்றும், நிலம் கையகபடுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளதாகவும் பழனி நாடார் எம்எல்ஏ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘1962ம் ஆண்டில் முதல்வராக காமராஜர் இருந்த ஆட்சிக்காலத்தில் அப்போது எம்எல்ஏவாக இருந்த ஊத்துமலை ஜமீன்தார் பாண்டியராஜ் இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப்பேரவையில் முன்வைத்தார். 2021ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார்.
அதன்படி இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் நானும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். மேலும் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முதல் 10 கோரிக்கையில் முதன்மை திட்டமாக இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. ஆனால், கடுமையான நிதி நெருக்கடியால் இரட்டை குளம் கால்வாய் திட்டம் தள்ளிப் போடப்பட்டது.
தற்போது இரட்டை குளத்தில் இருந்து ஊத்துமலை வரை சுமார் 7,500 ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் பயன்பெறும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும் இத்திட்டத்தை ரூ.72 கோடியில் செயல்படுத்த மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திட்டத்திற்காக நிலம் கையக படுத்தும் பணியும் விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு 75 ஆண்டு கால கனவுத் திட்டமான இரட்டை குளம் கால்வாய் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தென்காசி மாவட்டத்திற்கு வரும்போது அடிக்கல் நாட்ட உள்ளார்’’ என்றார்.
இதனிடையே இரட்டைகுளம் கால்வாய் திட்டப்பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவை தமிழ்நாடு நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணனிடம் பழனி நாடார் எம்எல்ஏ வழங்கினார்.