உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார்; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள சூர்யா காந்த், 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் 14 மாதங்களுக்கு மேல் இந்தப் பதவியில் வகிப்பார். பூடான், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இவ்விழாவில் பங்கேற்றனர்.
1962-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி ஹரியானாவின் ஹிசார் பகுதியில் சூர்ய காந்த் பிறந்தார். ஹிசாரில் பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் ரோத்தக் மற்றும் குருஷேத்திரா பல்கலைக்கழகத்தில் எல்எல்பி, எல்எல்எம் சட்டப் படிப்புகளை படித்தார். 1984-ம் ஆண்டில் ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகபணியை தொடங்கினார். பின்னர் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
கடந்த 2000-ம் ஆண்டில் ஹரியானா அட்வகேட் ஜெனரலாக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2018-ம் ஆண்டில் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 2019-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவியேற்றார்.
இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறுகிறார்.