சிதம்பரத்தில் பரபரப்பு ரூ.7.50 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் கடத்தியவர் கைது
*மேலும் ஒருவருக்கு வலை
சிதம்பரம் : சிதம்பரத்தில் ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பில் அம்பர்கிரீஸ் என்கிற திமிங்கலம் எச்சம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.திமிங்கலம் எச்சம் என்பது திமிங்கலத்தின் செரிமான அமைப்பிலிருந்து உருவாகும் ஒரு வகை திடப்பொருள் ஆகும். இது அம்பர் கிரீஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இது வாசனை திரவியங்கள், மருத்துவப் பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுவதால் அதிக விலை மதிப்புடையதாக உள்ளது. சில நேரங்களில் இது சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமிங்கலம் இனம் பாதிக்கப்படுவதால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு, திமிங்கலம் எச்சத்தை கடத்தி செல்வதாக ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அம்பேத்கர் தலைமையில், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், பாபு மற்றும் போலீசார் சிதம்பரத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். காரில் ஒரு வெள்ளை நிற துணிப்பையில் மர்ம பொருள் இருந்ததை பார்த்த போலீசார் அதைப் பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில் அந்த பொருள் திமிங்கலம் எச்சம் என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து 7 கிலோ 600 கிராம் திமிங்கலம் எச்சத்தை விற்பனைக்கு கடத்திச் சென்ற மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் புதுதெரு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்கிற மணிமாறன் மகன் ராஜி (எ) ராஜசேகர் (28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திமிங்கலம் எச்சம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை தேடி வருகின்றனர்.