சிதம்பரம் அருகே லால்புரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும்
சிதம்பரம் : புறவழிச்சாலையில் சேதமடைந்துள்ள மின்மாற்றி கம்பங்களை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மின்மாற்றியின் மூலம் தான் அருகில் உள்ள விவசாய நிலத்துக்கும், சுற்றுவட்டார மக்களுக்கும் மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல நாட்களாக மின்மாற்றியின் ஒருபுறம் உள்ள கம்பமானது சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது.
இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள், அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள், அலுவலக பணிக்கு செல்வர்கள் உட்பட பல தரப்பினரும் ஒருவித அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர்.
மேலும், பலத்த மழை பெய்தாலும், காற்று அதிகமாக வீசினாலும் இந்த மின்மாற்றி முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் நிலையும் இருந்து வருகிறது. எனவே மழைக்காலம் வருவதற்குள் உடனடியாக இந்த மின்மாற்றி கம்பங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.