சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் காருடன் சிக்கி ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி: திருப்பத்தூரை சேர்ந்தவர்கள்
திருப்பத்தூர்: சத்தீஸ்கரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காருடன் சிக்கி திருப்பத்தூரை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவரது 2 மகள்கள் பரிதாபமாக பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இதனால் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகதல்பூரில் மனைவி பவித்ரா(38), மகள்கள் சவுத்தியா(8), சவுமிகா(6) ஆகியோருடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில், ராஜேஷ்குமாரின் தம்பிக்கு ஆந்திர மாநிலம், திருப்பதியில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதற்காக ராஜேஷ்குமார் மனைவி பவித்ரா மற்றும் மகள்கள் சவுத்தியா, சவுமிகா ஆகியோருடன் நேற்று முன்தினம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சொந்த ஊரான திருப்பத்தூருக்கு காரில் புறப்பட்டார். அப்போது, சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு டர்பந்தனா என்ற இடத்தில் வந்தபோது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதில், ராஜேஷ்குமார் குடும்பத்தினர் வந்த கார் அடித்துச்செல்லப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பல மணி நேரம் போராடி காரை மீட்டனர். ஆனால், காரில் ராஜேஷ்குமார், பவித்ரா, சவுத்தியா, சவுமிகா ஆகிய 4 பேரும் சடலமாக கிடந்தனர். 4 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த துயர சம்பவம் காரணமாக திருப்பதியில் நேற்று நடக்க இருந்த ராஜேஷ்குமாரின் தம்பி திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.