சட்டீஸ்கரின் பிலாஸ்பூரில் நடந்த கோர விபத்து 2 ரயில்கள் மோதி 8 பயணிகள் பலி: 17 பேர் கவலைக்கிடம்
பிலாஸ்பூர்: சட்டீஸ்கரின் பிலாஸ்பூரில் ஒரே தண்டவாளத்தில் முன்னால் சென்ற சரக்கு ரயில் மீது மெமு பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 8 பயணிகள் பலியாகினர். படுகாயமடைந்த 17 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் கோர்வா மாவட்டத்தின் கெவ்ரா பகுதியிலிருந்து பிலாஸ்பூர் நோக்கி மெமு பயணிகள் ரயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் இந்த ரயில், கதோரா மற்றும் பிலாஸ்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது.
இதனால் மெமு ரயில் சரக்கு ரயிலின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில், மெமு ரயிலின் இன்ஜின் மற்றும் முன்வரிசை பெட்டிகள் நொறுங்கிப் போயின. மெமு ரயிலின் முன்வரிசை பெட்டிகள் உருக்குலைந்து சரக்கு ரயில் பெட்டியின் மேலே சொறுகின. இதனால் ரயில் பயணிகள் அலறித்துடித்தனர். தகவலறிந்த ரயில்வே போலீசாரும், மீட்பு படையினரும், அதிகாரிகளும் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பயணிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. பலர் படுகாயமடைந்தனர் அவர்கள் பிலாஸ்பூரில் உள்ள அப்போலோ மருத்துவமனை மற்றும் சட்டீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து பிலாஸ்பூர் கலெக்டர் சஞ்சய் அகர்வால் அளித்த பேட்டியில், ‘‘மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் இன்னும் ரயில் பெட்டி இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. மருத்துவமனையில் 17 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒரு பெரிய விபத்து. மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.
இதற்கிடையே, சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், பிலாஸ்பூர் கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து குறித்து விரிவான தகவல்களை கேட்டறிந்தார். விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த முதல்வர் விஷ்ணு தியோ சாய், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் மாநில அரசு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சிக்னல் செயலிழப்பு அல்லது மனித தவறு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது. விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* ரூ.10 லட்சம் இழப்பீடு
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.