சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சலைட்டுகளிடமிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்ட மூவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு தலா ரூ.5 லட்சம் சன்மானம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கமாண்டோக்களின் கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்பொழுது, பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டை ஓய்ந்த பிறகு, சம்பவ இடத்தில் இருந்து கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்களுடன், ஒரு துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் சில அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் அடையாளம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட மொத்த நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.