சட்டீஸ்கர் என்கவுண்டரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை: 3 போலீசாரும் பலி
பிஜப்பூர்: சட்டீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 போலீசாரும் பலியாகினர். சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் கங்கலூர் காட்டுப்பகுதியில் நக்சல் வேட்டையில் ரிசர்வ் படையினர் ஈடுபட்டனர். இந்த பகுதி தண்டேவாடா மாவட்ட எல்லையில் உள்ளது. மாவட்ட ரிசர்வ் காவல்படை,சிறப்புப் பணிக்குழு, மாநில காவல்துறையின் இரண்டு பிரிவுகள் மற்றும் கோப்ரா படையினர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 3 ரிசர்வ் படை வீரர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரு வீரர் காயம் அடைந்தார். இதையடுத்து படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை சட்டீஸ்கரில் மட்டும் நடந்த என்கவுன்டர்களில் 275 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் மட்டும் 239 பேர் கொல்லப்பட்டனர். ராய்ப்பூர் பிரிவில் வரும் கரியாபந்த் மாவட்டத்தில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துர்க் பிரிவில் உள்ள மொஹ்லா-மன்பூர்-அம்பாகர் சௌகி மாவட்டத்தில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.