கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு, முதல்வர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து!
டெல்லி: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிராண்ட் சுவிஸ் தொடரின் மகளிர் பிரிவில் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். கிராண்ட் சுவிஸ் தொடரின் மகளிர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, சீனாவைச் சேர்ந்த டன் ஜோங்யியை எதிர்கொண்டார். 11 சுற்று முடிவில் 8 புள்ளிகள் பெற்று வைஷாலி சாம்பியன் ஆனார். இதன் மூலம் 2026 ல் நடக்கும் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
"மகளிர் கிராண்ட் சுவிஸ் கிரீடத்தை நிதானத்துடனும் திறமையுடனும் பாதுகாத்து, மதிப்புமிக்க மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற நமது சென்னைப் பெண்
வைஷாலிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி வெறும் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், இப்போது தங்கள் கனவுகள் உலக அரங்கில் பிரதிபலிக்கும் எண்ணற்ற இளம் பெண்களுக்கும் ஒரு கொண்டாட்டமாகும்" என முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"சென்னையை சேர்ந்த வைஷாலி FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வென்றுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இது இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமையான தருணம். வைஷாலிக்கு உங்களில் இன்னும் பல வெற்றிகளை வாழ்த்துகிறேன்" என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
"சிறந்த சாதனை. வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.