கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் 2ம் நாளில் குகேஷ் சொதப்பல்: கார்ல்சன், கரவுனாவிடம் தோல்வி
மிசோரி: கிளட்ச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் ஒரு வெற்றி கூட பெற முடியாததால், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். கிளட்ச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் மிசோரி நகரில் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்கள் பேபியானோ கரவுனா, ஹிகாரு நகமுரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் போட்டிகளில் குகேஷ் அபாரமாக ஆடி 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் 2 போட்டிகளில் மோதி இரண்டிலும் தோல்வியை தழுவினார். 5வது சுற்றில், ஹிகாரு நகமுராவுடன் மோதிய குகேஷ் இரு போட்டிகளிலும் டிரா செய்தார்.
அதைத் தொடர்ந்து, கரவுனாவுடன் களமாடிய குகேஷ், முதல் போட்டியில் தோல்வியை தழுவினார். 2வது போட்டியில் டிரா செய்தார். அதனால், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், குகேஷ், நகமுரா ஆகிய இருவரும் 7 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளனர். மேக்னஸ் கார்ல்சன் 11.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். கரவுனா, 10.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். அவர் நேற்றைய போட்டியில் கார்ல்சனை வீழ்த்தினார்.