சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 1,736 மாணவர்களுக்கு ரூ.2.15 கோடி கல்வி ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 1,736 மாணவர்களுக்கு ரூ.2.15 கோடியளவில் கல்வி ஊக்கத்தொகையை அவர் வழங்கினார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
4 வருடங்க்ளுக்கு முன்பு, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதல் முறையாக 25 பேருக்கு 3 லட்சம் ரூபாய் அளவுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்தோம். அன்றைக்கு 25 பேரில் ஆரம்பித்தோம். இன்றைக்கு 1,736 பேருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கிறோம். இதுவரை 3 ஆயிரத்து 734 மாணவர்களுக்கு 4 கோடியே 58 லட்சம் ரூபாய் அளவுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து இருக்கிறோம்.
இந்தியாவிலேயே ஒரு சட்டமன்றத் தொகுதியில் கல்விக்காக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கிற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். நீங்கள் மேற்படிப்பில் என்ன படிக்கலாம். படித்தால் மட்டும் பத்தாது. உங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி கொடுக்கக்கூடிய நான் முதல்வன் திட்டம். `இல்லம் தேடி கல்வி’, `எண்ணும் எழுத்தும்’ இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மாணவர்களுக்காக உருவாக்கி இருக்கிறார்.
கல்விக்கு முக்கியத்துவம் தருகிற முன்னெடுப்புகளால், இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, 75 சதவிகிதம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்கிறார்கள். இந்த 75 சதவிகிதத்தை 100 சதவிகிதமாக ஆக்க வேண்டும் என்று முதல்வர் அவரின் பணிகளைச் செய்துகொண்டு இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சலில், மாணவர்களைக் கல்வியில் இருந்து வெளியேற்றுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு செய்துகொண்டு இருக்கிறது.
இந்த சூழ்ச்சிகளை எல்லாம் எதிர்த்து முதல்வர் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில்கூட, மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டு, ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட, நம் முதல்வரின் முயற்சிகளுக்கு மாணவர்கள் நீங்கள் என்றைக்கும் ஆதரவாக நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிற்றரசு, பகுதி கழக செயலாளர்கள் மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், வி.பி.மணி, வி.பி.பொன்னரசு, கௌதம், பி.கே.பாபு, வி.எஸ்.கலை, வழக்கறிஞர் பிரகாஷ், வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.