போதை மாத்திரை வழக்கில் வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பில் இருந்த சென்னை வாலிபர் கைது
திருவள்ளூர்: வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. இதனால் தமிழகத்திற்குள் அவ்வப்போது போதை பொருள் கடத்தி வரும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தா சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சப்- இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போதைப்பொருள் தடுப்பு சிறப்பு தனிப்படை போலீசார் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணித்து வந்தனர்.
இதில் பல்வேறு இடங்களில் முன்னீர்(28), ஜாவேத் (38), இன்ஸ்ட்ராம் டான்சர் சிபிராஜ் (25) உள்ளிட்ட 3 பேரிடம் 109 கிராம் மெத்தாபைட்டமின் போதை மாத்திரைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டெல்லியிலிருந்து இணையதளம் மூலம் போதை மாத்திரை அனுப்பப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நாமக்கல்லில் வசித்து வந்த நைஜீரியநாட்டைச் சேர்ந்த மைக்மேல் நம்நடி(43), சென்னையில் வசித்து வந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த கபிதா யானிக் திஷிம்போ, (36) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில கிடைத்த தகவலின் படி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படையினர் டெல்லி சென்று போதைமாத்திரை கும்பலின் தலைவனான செனெகல் நாட்டைச் சேர்ந்த பெண்டே (43) என்பவரை கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று திருவள்ளூருக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கூட்டாளி சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மதின்அகமது செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் விசாரணையில் செப்டம்பர் மாதத்தில், பெண்டே வழங்கிய வங்கி கணக்கிற்கு செயற்கை போதைப் பொருள் வாங்குவதற்காக ரூ.55 ஆயிரம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மதின் அகமது பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் வழக்கு நிலுவையில் இருப்பதும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும் மதின் அகமது இந்தியாவிற்கு வெளியில் இருந்து செயல்படும் பல வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இந்த வெளிநாட்டு நபர்கள் வழங்கும் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு மதின் அகமது பணம் அனுப்புவார். பணம் கிடைத்ததும், கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்து நடத்துனர்கள் மூலம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பின்னர் ஜி.பி.எஸ் கருவி தகவல் மதின் அகமதுவிற்கு அனுப்பப்பட்டு மேற்படி போதைப் பொருட்கள் பெறப்பட்டு வந்துள்ளன.
மேலும் இந்த நெட்வொர்க் மூலம் செயற்கை போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் மீண்டும் மீண்டும் கடத்தப்பட்டு வந்தது. இந்த ரகசிய தகவல்களின் பேரில் தனிப்படை போலீசார் சென்னையில் இருந்த மதின் அகமது கைது செய்து அவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் மெத்தாம்ஃபெட்டமின் 55 கிராம் எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் 40 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.