சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்
சென்னை: சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், 165 முக்கிய சந்திப்புகளில் புதிய ஸ்மார்ட் ட்ராஃபிக் சிக்னல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம், வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சிக்னல்களின் நேரத்தை தானாக மாற்றும். தற்போதைய சிக்னல்கள் 60-90 வினாடிகளுக்கு ஒருமுறை மாறுகின்றன. ஆனால், இந்த புதிய அமைப்பு, வாகனங்கள் அதிகம் உள்ள பாதைகளில் பச்சை விளக்கு 120 வினாடிகள் வரை நீடிக்கும்; வாகனங்கள் குறைவாக உள்ள இடங்களில் 30 வினாடிகளாக குறையும்.
இதனால், தேவையற்ற நிறுத்தங்கள் தவிர்க்கப்படும். முதற் கட்டமாக முக்கிய பாதைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன்படி, இந்த அமைப்பு முதலில் சென்னையின் முக்கிய பாதைகளான அண்ணா சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, சர்தார் படேல் சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, டெய்லர்ஸ் சாலை ஆகியவற்றில் செயல்படுத்தப்படும். ஈ.வி.ஆர். சாலையில் வேப்பேரி, ஈகா தியேட்டர் உள்ளிட்ட ஆறு சந்திப்புகளில் இந்த அமைப்பு ஏற்கனவே சோதனை முறையில் இயக்கப்பட்டுள்ளது.