இந்தியாவை பிரதிபலிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது: ஒன்றிய அமைச்சர் புகழாரம்
இம்மாநாட்டில், ஒன்றிய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதமாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில் முனைவோர்களை ஈர்ப்பதற்கான பல்வேறு திட்டங்கள், தேவையான வசதிவாய்ப்புகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. மற்ற நாடுகளிடையே இந்தியாவை பிரதிபலிக்கும் நகரமாக சென்னை திகழ்ந்து வருகிறது. இங்கு பழமையான சிற்பங்கள், கலாசார கொள்கைகள் சிறந்து விளங்குகிறது. மேலும், மற்ற மாநிலங்களுக்கு புதிய நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகளை எடுத்துக்காட்டும் விதமாக சென்னை திகழ்கிறது. இங்கு ஐடி துறை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைந்துள்ளது.
இங்குள்ளதைப் போல் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைய அதிக முதலீடுகள் தேவை. தற்போது டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் ஏஐ எனும் செயற்கை தொழில்நுட்ப வளர்ச்சியும் கணிசமாக அதிகரிக்க துவங்கியுள்ளன. எனவே, சென்னையில் முதலீடு செய்வதை போல், வடகிழக்கு மாநிலங்களிலும் முதலீடு செய்ய முன்வாருங்கள். ஏனெனில், வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியை ஒன்றிய அரசு முதலீடு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது 17 விமான நிலையங்களாக உயர்த்தப்பட்டு உள்ளன. இங்கு விமான போக்குவரத்து நகர்வுகள் 2000 ஆக உயர்ந்துள்ளது. ரூ.18 ஆயிரம் கோடியில் ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்திலும் சிறந்ததாக அமையும் என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.