சென்னையிலிருந்து திருச்சி புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது
சென்னை: சென்னையில் இருந்து திருச்சி செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி, ஓடு பாதையில் ஓட தொடங்கியது. விமானத்தில் 68 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 73 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இந்நிலையில், விமானத்தை வானில் பறக்கச் செய்தால் ஆபத்து என்பதை உணர்ந்து, அவசரமாக ஓடுவதிலேயே விமானத்தை நிறுத்தினார். அதோடு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இழுவை வண்டி வந்து, விமானத்தை இழுத்துக் கொண்டு புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தப்பட்டது. விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டு இருந்தனர். அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரத்தில் பழுது பார்க்கப்பட்டது. அதன் பிறகு சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, நேற்று காலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தின் இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு 73 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.