சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை!
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், போரூர், பூவிருந்தவல்லி, வளசரவாக்கம், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பத்திக்கப்பட்டுள்ளது. 317 பயணிகளுடன் தோகாவில் இருந்து சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது. துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து பறந்துவிட்டு தரையிறங்கின. சென்னையில் இருந்து மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
மேலும் தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி,சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப். 16, 17, 18, 19 ஆகிய 4 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.