சென்னையில் துணை நடிகை மூலம் போதைப்பொருள் விற்ற ஏஜென்ட் கைது: பெங்களூருவில் சிக்கினார்
சென்னை: சென்னையில் துணை நடிகை மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்து, ஏஜென்டை 10 மாதங்கள் தேடலுக்கு பிறகு பெங்களூருவில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னையில் பப்புகள் மற்றும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்து வந்ததாக கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த துணை நடிகையான எஸ்தர் என்ற மீனா (28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், துணை நடிகை எஸ்தர் தனது நண்பர்களுடன் இணைந்து சின்னத்திரை நடிகைகளுக்கு வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து மெத்தாம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட அவரது ஆண் நண்பரான சூளை காளத்தியப்பா தெருவை சேர்ந்த பட்டேஜா பவன் (எ) ஜேம்ஸ் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 19 கிராம் மெத்தாம்பெட்டமைன், 99 கிராம் மலனா கஞ்சா பேஸ்ட் மற்றும் கிரீம், 95 மில்லி கஞ்சா ஆயில், 21 கிராம் ஓஜி கஞ்சா மற்றும் 12 எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் துணை நடிகை மூலம் சென்னையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏஜென்ட் சரவணராஜ் (55) என்பவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு தீவிர தேடலுக்கு பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமசாமி பாலையா பகுதியில் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த சரவணராஜை கைது செய்தனர். இவர் போதை பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை போதை பொருள் கொடுக்கும் கும்பலுக்கு பரிமாற்றம் செய்து வந்ததும், போதை பொருள் மொத்தமாக வாங்கி துணை நடிகை மூலம் சென்னை முழுவதும் புழக்கத்தில் விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சரவணராஜ் அளித்த தகவலின்படி போதை பொருள் விற்பனையில் பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்ய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.