சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு தானியங்கி குடிநீர் இயந்திரம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை: சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.மேயர் ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் முதற்கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் பயிலும் 16 சென்னை பள்ளிகளில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தினை தொடங்கி வைக்கும் விதமாக அண்ணா நகர் மண்டலம், செனாய் நகர் புல்லா அவென்யூவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறன்மிகு குடிநீர் தானியங்கி இயந்திரத்தின் பயன்பாட்டினை இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்த பள்ளியில் பயிலும் 1373 மாணவர்கள் பயன்பெறுவர்.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சியின் கல்விக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக முதற்கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கொளத்தூர், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, மடுவின்கரை, புதிய வண்ணாரப்பேட்டை, கே.கே.நகர் சென்னை மேல்நிலைப்பள்ளிகள், எம்.எச்.சாலை, மேற்கு சைதாப்பேட்டை, புல்லா அவென்யூ, புத்தா தெரு, மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், செம்மஞ்சேரி மற்றும் எம்.ஜி.ஆர். நகர் சென்னை நடுநிலைப் பள்ளிகள், ஜோன்ஸ் தெரு சென்னை தொடக்கப்பள்ளி, சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 16 சென்னை பள்ளிகளில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 16 எண்ணிக்கையிலான திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது புல்லா அவென்யூ, மார்க்கெட் தெரு மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 3 சென்னை பள்ளிகளில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சென்னை பள்ளிகளில் ஏற்கனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு 250 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாணவர்களின் கூடுதலான குடிநீர் தேவையின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு இந்த தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, 500 முதல் 1000 மாணவர்கள் பயிலும் 35 சென்னை பள்ளிகளில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், நிலைக்குழுத் தலைவர்கள் நே.சிற்றரசு (பணிகள்), த.விசுவநாதன் (கல்வி), மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜன் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.