சென்னை-திருச்சி-தூத்துக்குடி போன்ற முக்கிய வழித்தடங்களில் ஏ320 போன்ற சிறந்த விமானங்கள் உடனடியாக இயக்கப்பட வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை
சென்னை: சென்னை-திருச்சி-தூத்துக்குடி போன்ற முக்கிய வழித்தடங்களில் ஏ320 போன்ற சிறந்த விமான சேவைகள் இயக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ஒவ்வொரு இண்டிகோ விமானங்களும் முழுமையான பயணிகளால் நிரம்பி செல்கிறது. இதுபோன்ற அவசர தேவைகளுக்குள்ளான வழித்தடங்களில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமானது பெரிய அளவிலான ஏ320 விமானங்களை இயக்க மறுத்து வருகிறது.
மேலும், இந்த முக்கிய வழித்தடங்களில் ஏடிஆர்-72 வகை விமானங்களே இயக்கப்படுகின்றன. பொதுவாக, குறைந்த பயணிகள் எண்ணிக்கையுள்ள மூன்றாம் நிலை நகரங்களுக்குள் இயக்கப்படும் இந்த சிறிய விமானங்கள், தற்போது தமிழகத்தின் பெரும் தொழில் நகரங்களுக்கு இயக்கப்படுவது பயணிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறிய ஏடிஆர் விமானத்தில் பயணம் செய்யும் போது ஏ.சி அதிகம் இல்லாததால் எப்11 ரேசர்களினால் மிகுந்த வெப்பம் மற்றும் வியர்வையால் ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ வரை எடை குறைகிறது.
ஏனென்றால் விமானம் முழுவதும் வெப்பம், மோசமான ஏர் கண்டிஷனிங் காரணமாகும். மேலும், இது ஒரு விமான பயணமா, வியர்வை விடும் பயணமா என தெரியவில்லை என ஒரு தொழிலதிபர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், சிறிய ஏடிஆர் விமானங்களில் கூட, டிக்கெட் விலை பெரும்பாலும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உயர்ந்திருக்கிறது. அதற்கேற்ப சிறந்த விமான வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால் சிறிய இருக்கைகள், அதிக சுழற்சி காற்று (டெர்போனல்ஸ்), கடுமையான தரையிறக்கங்கள் மற்றும் ஓய்வு இல்லாத சூடான பயண அனுபவம் போன்றவை முக்கிய குறைகளாகவே உள்ளது. தமிழ்நாட்டிற்கு பெரிய விமானங்களை அறிமுகப்படுத்தாமல், புதிய, நவீன விமான நிலையங்களை அறிமுகப்படுத்துவதில் என்ன பயன்? தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இதுவரை ஒன்றிய அமைச்சகத்துக்கும், இண்டிகோ விமான நிறுவனத்துக்கும் இந்த குறைகளை எழுதி சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைப் பற்றிய கேள்விகளை ஒன்றிய அரசிடம் எழுப்பியுள்ளனர். ஆனால், இதற்கான உரிய பதில் அல்லது மாற்றம் என்பது தற்போது வரை இல்லை. மேலும் இந்த வழித்தடங்களை பெருமளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர். அத்துடன் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய தூணாக உள்ளது. எனவே பெரிய ஏ320 வகை விமானங்களை இயக்க மறுப்பது திட்டமிட்டு புறக்கணிப்பாகவே உள்ளது என முதலீட்டாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சென்னை-திருச்சி-தூத்துக்குடி போன்ற முக்கிய வழித்தடங்களில் ஏ320 விமானங்கள் உடனடியாக இயக்கப்பட வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அதிக கட்டண வசூலிக்கப்படும் இடங்களில் சிறந்த விமான சேவைகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு போன்ற முன்னோடியான மாநிலத்திற்கு விமான சேவையில் சுணக்கம் இல்லாமல் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.