சென்னையில் வரும் நவம்பர் 24ம் தேதி முதல் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மொத்தம் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, சென்னை மாநகராட்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். செல்லப்பிராணிகளை பொது இடங்களில் அழைத்து செல்லும்போது கழுத்து பட்டை இன்றி அழைத்து சென்றால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் செல்லப்பிராணிகள் பொதுவெளியில் கழிவு ஏற்படுத்த உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. பொது இடங்களில் செல்லப்பிராணிகள் கழிவு ஏற்படுத்தினால், அதனை சுத்தம் செய்வது உரிமையாளரின் கடமை.
வரும் நவம்பர் 24ம் தேதி முதல் இந்த விதிமுறைகளை அமல்படுத்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியில் உள்ள செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்களின் விவரங்களை சேகரிக்கும் வகையில் 2 லட்சம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்யவும், 80 ஸ்டிக் வகை ஆர்எப்ஐடி ரீடர்கள் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுப்பது, மேலும், 5 ஆண்டுகள் பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.4.5 கோடி மதிப்பில் செயல்படுத்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி வருவாய் துறை வணிக வளாகங்களின் பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டு குழு மற்றும் துணை குழுக்கள் அமைத்துள்ளது. சென்னை மந்தைவெளிபாக்கத்தில் உள்ள கிழக்கு வட்ட சாலைக்கு சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம் செய்ய அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூய்மைப்பணியாளர்களுக்கு 3 வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும் என கூறி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது, முதல்கட்டமாக பரீட்சார்த்த முறையில் சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள 29,455 தூய்மைப்பணியாளர்களுக்கு 3 வேளை இலவசமாக உணவு வழங்க சென்னை மாநகராட்சி தனியாரிடம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
இதில், புட் ஸ்விங் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு ரூ.180 கோடியே 27 லட்சத்தி 36 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தினம்தோறும் காலை 166 இடங்களிலும், மதியம் 285 இடங்களிலும், இரவு 61 இடம் என அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தம் மன்ற கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கி தீர்மானம் என மொத்தம் 72 தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தீர்த்தி பேசுகையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி சிலை நிறுவ கோரிக்கை வைத்தார். ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
* திமுக - அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்
அதிமுக மாமன்ற உறுப்பினர் சதிஷ்குமார், நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கியது மறைந்த முதல்வர் ஜெயலலிதா என கூறினார். அவர் கூறியதும், நெமிலி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது திமுக காலத்திலதான் என கூறி திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது எடப்பாடிதான் சதிஷ்குமார் கூறினார். இதனையடுத்து அதிமுக திமுகவினர் மாறி மாறி பேசிக்கொண்டனர், இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் பின்னர் மாமன்ற உறுப்பினர் சதிஷ்குமார் மைக் ஆப் செய்யப்பட்டது. மைக் ஆப் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
