வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் தயார் நிலையில் 1,496 மோட்டார் பம்புகள்
சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையையொட்டி மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்கள். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 160 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற 7 சூப்பர் சக்கர் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரானது இந்த நீரிறைக்கும் பம்புகளின் மூலம் அருகிலுள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 22 டிராக்டர் பம்புகள் மற்றும் 100 Hp திறன் கொண்ட 19 டீசல் பம்புகள் மூலம் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்படுகிறது.