சென்னை பெருநகர ஊர்க்காவல் படை பணி: தகுதியானவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படை பணிக்கு தகுதியான நபர்கள் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுள்ள இளமையும், ஊக்கமும் அர்ப்பணிப்பு பண்பும், பொது நல தொண்டில் ஈடுபாடு கொண்டு சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குற்றப்பன்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.1.10.2025 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவார். இரவு ரோந்து பணி பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560 ம் சிறப்பு படியாக வழங்கப்படும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலையம் வளாகம், சென்னை-15 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.