சென்னையில் இன்று 14 இண்டிகோ விமானங்கள் ரத்து: விமான சேவை 9வது நாளாக பாதிப்பு
சென்னை: சென்னையில் இன்று மட்டும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு குளறுபடிகளால் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்று பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய விதிமுறைகளை புறந்தள்ளிய இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது.
போதிய விமானிகள் இல்லாத சூழலில் விமான சேவைகளை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது. ஒன்றிய அரசின் மீது எதிர்க்கட்சிகள் குறை கூறி வந்த நிலையில், அனைத்து குளறுபடிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் தான் முழுக்க முழுக்க காரணம் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையால், குளிர் கால அட்டவணையில், 10 சதவீத விமான சேவையை குறைக்கும்படி இண்டிகோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 9வது நாளாக இன்றும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மலேசியா, பாங்காக், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெயப்பூர், ஐதராபாத், உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.