சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா தலைமை நீதிபதி தேசியக்கொடி ஏற்றினார்
சென்னை: நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், தமிழக அமைச்சர் ரகுபதி, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற பதிவாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர், உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி தலைமை நீதிபதி கவுரவித்தார். முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.