ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக எகிறியது தங்கம் விலை; பவுன் ரூ.86,160க்கு உயர்ந்து வரலாற்று உச்சம்
சென்னை: தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் போட்டி போட்டு உயர்ந்து புதிய உச்சம் கண்டு வருகிறது. ஒரே சமயத்தில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். கடந்த 27ம் தேதி (சனிக்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,640க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.85,120க்கும் விற்றது. இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் உயர்வையே சந்தித்தது.
நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,700க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.85,600க்கு விற்றது. இதன் மூலம் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல வெள்ளி விலையும் நேற்று காலையில் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.160க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.
இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று மாலையில் தங்கம் விலை 2வது முறையாக அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,770க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.86 ஆயிரத்து 160க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்று உச்சத்தை பதிவு செய்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று மட்டும் ஒரே நாளில் காலை, மாலை என தங்கம் விலை கிராமுக்கு ரூ.130, பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலையில் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தீபாவளி போனஸ் பணத்தில் சிறு குண்டுமணி தங்கமாவது பொதுமக்கள் வாங்குவது உண்டு. இந்த நேரத்தில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை பதிவு செய்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.