2 நாட்களில் 4 முறை உயர்ந்த தங்கம் விலை... நகை வாங்குவோரை நடுங்க வைக்கும் விலை... சவரன் ரூ.85,000ஐ தாண்டியது!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.85,000ஐ தாண்டியது. 2வது நாளாக இன்றும் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. நேற்று காலையில் தங்கம் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.82,880க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.148க்கும், கிலோவுக்கு ரூ.3000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
காலையில் எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதே வேகத்தில் நேற்று மாலையிலும் தங்கம் விலை உயர்ந்தது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,430க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83,440க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை ஒரே உயர்ந்துள்ளது. இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,500க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.149-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்து நகை வாங்குவோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.85,120க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நவராத்திரி பண்டிகை தற்போது தொடங்கியுள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வேறு வருகிறது. இப்படி பண்டிகை நாட்கள் தொடர்ச்சியாக வருகிறது. தீபாவளி முடிந்ததுமே திருமண முகூர்த்த காலம் தொடங்கும்.
வழக்கமாகவே பண்டிகை, சுபமுகூர்த்த காலங்களில் தங்கம் விலை சற்று உயர்வதுண்டு. இந்த ஆண்டு ஏற்கெனவே பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் பண்டிகை காலத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடி காட்டியுள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.