சென்னையில் தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: மீண்டும் மீண்டுமா?.. நகை பிரியர்களுக்கு ஷாக்..!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து வந்தது. விலை குறைவு இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு விலை உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 16ம் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.82,240 என்ற வரலாற்று புதிய உச்சத்தை தொட்டது. 17ம் தேதி தங்கம் விலை ரூ.82,160 ஆகவும், 18ம் தேதி ரூ.81,760 ஆகவும் குறைந்தது. 19ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,840க்கு விற்கப்பட்டது.
20ம் தேதி தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.82,320க்கு விற்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வகையில் நேற்று செப்டம்பர் 22ஆம் தேதி கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,430க்கும், சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,500க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.149-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நவராத்திரி பண்டிகை தற்போது தொடங்கியுள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வேறு வருகிறது. இப்படி பண்டிகை நாட்கள் தொடர்ச்சியாக வருகிறது. தீபாவளி முடிந்ததுமே திருமண முகூர்த்த காலம் தொடங்கும். வழக்கமாகவே பண்டிகை, சுபமுகூர்த்த காலங்களில் தங்கம் விலை சற்று உயர்வதுண்டு. இந்த ஆண்டு ஏற்கெனவே பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் பண்டிகை காலத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடி காட்டியுள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.