சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனை! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னை: உலகளாவிய பங்குசந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், நாடுகள் அளவில் சீனா அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவிகிறது. இதனால் தங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் தினசரி உற்பத்தியை தாண்டி இருப்பதால், தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், வெள்ளி பொருட்களை மின்சார பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார் என மின்சாதன பொருட்களின் உற்பத்தி புதிய அத்தியாயத்தில் பயணம் செய்து வருகிறது. இதனால் வெள்ளியின் தேவையில் தினமும் கிடைக்கும் அளவில் பாதிக்கும் மேல் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கொள்முதல் அதிகமானதால் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,890 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ரூ.1,61,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையும், வெள்ளி விலையும் ஒருசேர உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளி விலை சுமார் 300 மடங்கு உயர்ந்திருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் பாரம்பரியம், கலாச்சார அடையாளமாக தங்கம், வெள்ளி பொருட்கள் பார்க்கப்படுகின்றன. அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.