சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் விமானம் தாமதம்: பயணிகள் 3 மணி நேரம் அவதி
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையம், 4வது டெர்மினலில் இருந்து வழக்கமாக மாலை 6.50 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளுடன் திருச்சிக்கு புறப்பட்டு செல்லும். இரவு 7.50 மணியளவில் திருச்சியை சென்றடையும். அங்கிருந்து இரவு 8.20 மணியளவில் புறப்பட்டு, சென்னையை இரவு 9.20 மணியளவில் வந்தடைவது வழக்கம். இந்நிலையில், சென்னை உள்நாட்டு விமான முனையம் டெர்மினல் 4ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி செல்ல வேண்டிய 148 பயணிகள் நேற்று மாலை 5.30 மணிக்கே வந்து காத்திருந்தனர். ஆனால் வழக்கமாக புறப்பட வேண்டிய 6.50 மணியளவில், விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு என்ன காரணம், எப்போது செல்லும் என்று தெரிவிக்காததால், சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து பயணிகள் பெரிதும் பரிதவித்தனர்.
பின்னர், ஒருவழியாக சென்னையில் இருந்து 148 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 10.20 மணியளவில் புறப்பட்டு, இரவு 11.10 மணியளவில் திருச்சி சென்றடைந்தது. மீண்டும் அங்கிருந்து நள்ளிரவு 12 மணியளவில் 157 பயணிகளுடன் புறப்பட்டு, நள்ளிரவு 12.40 மணியளவில் சென்னையை வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சுமார் 3 மணி நேர தாமதத்தினால், அந்த விமானத்தில் சொந்த ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு, திருச்சியிலிருந்து சென்னைக்கு திரும்பிய 157 பயணிகளும் நள்ளிரவில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகள் மூலம் சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர், வேறுவழியின்றி அதிக கட்டணத்துடன் கால்டாக்சிகளில் ஏறி, தங்களின் வீடுகளுக்கு சென்றனர்.