சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பாஜ மாநில நிர்வாகி உமாராணியின் மகன் உட்பட 4 பேர் கைது: ரூ.2.65 லட்சம், 260 கிராம் ஓ.ஜி.கஞ்சா பறிமுதல்
சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் போதை பொருள் விற்பனை வழக்கில் சேலம் மாவட்டம் முன்னாள் பாஜ மகிளா மோர்ஸா பொது செயலாளர் உமா ராணியின் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சூளைமேடு பகுதியில் போலீசார்கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் சுற்றி வந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் ஓ.ஜி.வகை கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே 4 பேரையும் பிடித்து சூளைமேடு காவல் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அதன்படி சூளைமேடு போலீசார் விசாரணை நடத்திய போது, சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பாஜ மகிளா மோர்ஸா பொது செயலாளர் உமா ராணியின் மகன் பூரணசந்திரன்(21) என தெரியவந்தது.
இவர், தனது நண்பர்களான சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரதாப்(24), பள்ளிக்கரணையை சேர்ந்த ஜனார்த்தனன்(27), வேளச்சேரியை சேர்ந்த அப்துல் வாசிம்(22) ஆகியோருடன் இணைந்து பெரிய அளவில் சென்னையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதில் பாஜ நிர்வாகியின் மகனான பூரணசந்திரன் போதை பொருள் கும்பலுக்கு தலைமை வகித்து, போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பலுன் நேரடி தொடர்பு வைத்து கொண்டு, குறைந்த விலைக்கு போதை பொருட்கள் வாங்கி சென்னை முழுவதும் தனது நண்பர்கள் உதவியுடன் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பாஜ நிர்வாகியின் மகன் பூரணசந்திரன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 260 கிராம் உயர் ரக கொண்ட ஓ.ஜி வகை கஞ்சா, போதை மாத்திரைகள், ரூ.2.65 லட்சம் ரொக்க பணம், ஒன்றரை கிலோ கஞ்சா, எடை மெஷின் 5, செல்போன் 6, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் போதை பொருள் விற்பனையில் சென்னை ஏஜென்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இதன் பின்னணியில் உள்ள போதை பொருள் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.