சென்னை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 10,39,737 வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் தொடர்பான கணக்கீட்டு படிவம்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான கணக்கீட்டுப் படிவம் நவ.4ம் தேதி முதல் நவ.8ம் தேதி வரை 10,39,737 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அறிவிப்பு 27.10.2025 முதல் அறிவிக்கப்பட்டு, அதன் செயலாக்கத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தினை வீடுவீடாகச் சென்று வழங்குவது தொடர்பாக பயிற்சிகள் 28.10.2025 முதல் 03.11.2025 வரை வழங்கப்பட்டது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு 04.11.2025 அன்று முற்பகல் பயிற்சி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 40,04,694 வாக்காளர்களுக்கு 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுவீடாக சென்று கணக்கீட்டுப் படிவம் 04.11.2025 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
* நவ.4ம் தேதி முதல் நவ. 8ம் தேதி வரை கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்ட விவரம்
தொகுதி எண் தொகுதியின் பெயர் மொத்தவாக்காளர்கள் கணக்கீட்டுபடிவம் வழங்கப்பட்டவாக்காளர்கள்
11 ஆர்.கே.நகர் 2,35,272 1,21,120
12 பெரம்பூர் 2,97,526 1,00,412
13 கொளத்தூர் 2,90,653 54,237
14 வில்லிவாக்கம் 2,40,466 61,130
15 திரு.வி.க.நகர் 2,23,571 43,594
16 எழும்பூர் 1,97,465 40,339
17 இராயபுரம் 1,98,576 53,441
18 துறைமுகம் 1,80,341 45,688
19 சேப்பாக்கம்
-திருவல்லிகேணி 2,40,087 84,971
20 ஆயிரம் விளக்கு 2,38,374 44,760
21 அண்ணாநகர் 2,80,422 54,312
22 விருகம்பாக்கம் 2,85,947 57,998
23 சைதாப்பேட்டை 2,73,717 72,322
24 தியாகராயநகர் 2,35,497 52,336
25 மயிலாப்பூர் 2,69,260 58,306
26 வேளச்சேரி 3,17,520 94,871
மொத்தம் 40,04,694 10,39,737
* மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 04.12.2025க்குள் கணக்கீட்டுப் படிவம் வழங்கி வாக்காளரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஏற்கனவே வாக்காளரிடம் வழங்கப்பட்ட 2 படிவங்களில் ஒன்றை பெற்றுக் கொண்டு, அதற்கு ஆதாரமாக மற்றொரு கணக்கீட்டுப் படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒப்புகை கையொப்பமிட்டு அதனை அந்த வாக்காளரிடம் வழங்குவார். வாக்காளர்கள் கணக்கீட்டுப் படிவங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 1950 என்ற தேர்தல் உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.