சென்னைக்கு கிழக்கே 780 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும்: காக்கிநாடா அருகே கரையை கடக்க வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு 780 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இன்று புயலாக மாறும் வாய்ப்புள்ளது. மேலடுக்கில் உள்ள எதிர் காற்று தடுப்பதால் புயலின் வேகம் குறைந்து ஆந்திராவில் கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
தற்போது சென்னைக்கு கிழக்கு- தென் கிழக்கே 780 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு நோக்கியும் வட மேற்கும் நோக்கியும் நகரும். இது சென்னைக்கு 360 கிமீ தொலைவில் நெருங்கி வரும் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 250 கிமீ தொலைவில் நெருங்கி வரும் என்றும், அப்படியே விலகி ஆந்திரா பகுதிக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலடுக்கில் உள்ள எதிர்காற்று தடுப்பதால் இது திசை மாறி ஆந்திராவுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழத்த தாழ்வு மண்டலம் மும்பைக்கு மேற்கே 450 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் அரபிக் கடலலோர மாநிலங்களிலும், கோவா குஜராத் பகுதிகளில் மழை பெய்யும். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தால் இன்றும் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆனால் நாளை அது புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை நேற்று தீவிரமாக இருந்தது. ஒருசில இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வெப்பநிலை ஒருசில இடங்களில் அதிகரித்து காணப்பட்டது. தஞ்சாவூர், கன்னியாகுமரி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தமான் பகுதியில் இருந்து மேற்கு- தென்மேற்கே சுமார் 620 கிமீ தொலைவிலும், விசாககப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கே 830 கிமீ தொலைவிலும், சென்னைக்கு 780 கிமீ தொலைவிலும், காக்கி நாடாவில் இருந்து 830 கிமீ தொலைவிலும் நேற்று நிலை கொண்டது.
மேற்கண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக இன்று வலுவடைந்து, பின்னர் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து 28ம் தேதி காலையில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதியில் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகில் 28ம் தேதி மாலை- இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலுக்கு மோன்தா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 கிமீ வேகம் முதல் 100 கிமீ வேகத்திலும் இடையிடையே 110 கிமீ வேகத்திலும் காற்று வீசும். அதேபோல அரபிக் கடலில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை இன்று பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 28ம் தேதியில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.மேலும் சென்னையில் பொதுவாக இன்று மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.
தமிழக கடலோரப் பகுதிகள, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை வீசும். மேலும் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வ ங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்திலும் இடையிடையே 100 கிமீ வேகத்திலும் காற்று வீசும். அதேபோல ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக இன்று வலுவடையும்.
* பின்னர் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து 28ம் தேதி காலையில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* தீவிர புயல் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதியில் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகில் 28ம் தேதி மாலை- இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.