சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் மோன்தா புயல்: மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நாளை கரையை கடக்கிறது
சென்னை: சென்னைக்கு 480 கி.மீ. தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. அதேவேளை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக உருமாறியுள்ளது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மோந்தா (Montha) என பெயரிட்டுள்ளது. சென்னைக்கு 480 கி.மீ. தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காக்கிநாடாவுக்கு 530 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும் விசாகப்பட்டினத்துக்கு 560 கி.மீ. தொலைவிலும் புயல் உள்ளது.
அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து 890 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 6 மணி நேரமாக 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த மோன்தா புயல் தற்போது 17 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த புயலின் நகரும் வேகம் அதிகமானது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், தற்போது வடமேற்கு திசையில் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது. காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மோன்தா புயல் நாளை கரையை கடக்கிறது என்று கூறியுள்ளது.