சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு: பொதுமக்களின் புகார்களை நேரடியாக கேட்டறிந்தார்
சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி எண்ணிற்கு வரப்பெற்ற புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கணினிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மிகப்பெரிய எல்இடி திரைகள் மூலமாக நகரின் பல்வேறு இடங்களில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுவதையும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை பெய்துள்ள விவரங்களையும் தமிழ்நாடு துணை முதல்வர் மின்னணு திரையில் பார்வையிட்டார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு கால்வாய்களில் மழை நீர் தடையின்றி செல்வதையும், நேப்பியர் பாலம் அருகில் உள்ள முகத்துவாரத்தில் நீர் தடையின்றி கடலுக்கு செல்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளின் விவரங்கள் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்வதுடன், புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்குமாறும், அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் வடகிழக்கு பருவமழை பணிகளை மேற்கொள்ளுமாறும் துணை முதல்வர் அறிவுறுத்தினார்.