சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.10.89 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை: கோயம்புத்தூர், சென்னை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிய விளையாட்டு விடுதி, புதுப்பிக்கப்பட உள்ள பார்வையாளர் மாடம், புதிதாக கட்டப்பட உள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் என மொத்தம் ரூ.10.89 கோடி மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் நுற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் புதிய விளையாட்டு விடுதி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் புதுப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள விளையாட்டு விடுதி, கோயம்புத்தூர் மாவட்டம் நேரு விளையாட்டு வளாகத்தில் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ள பார்வையாளர் மாடம், கன்னியாகுமரி மாவட்டம்,
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சிறு விளையாட்டு அரங்கம் என மொத்தம் ரூ.10.89 கோடி மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.