சென்னையில் மழைநீர் வடிவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை: முதல்வரின் நடவடிக்கைக்கு பொன்குமார் பாராட்டு
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு அமைவதற்கு முன்பு ஓரிரு நாள் மழை பெய்தாலும் பல நாட்கள் தண்ணீர் வடியாமல், மக்கள் படகுகளில் செல்லக்கூடிய அவலத்தை எல்லாம் பார்த்த சென்னை மாநகரம், தற்போது தொடர் மழை பெய்தும் மழைநீர் வடிவதில் எந்த பிரச்னையும் இல்லாத நிலை கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைகின்றனர். இதற்கு காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மேலாண்மையின் கீழ் அரசு நிர்வாகம் எடுத்த தொடர் நடவடிக்கையேயாகும். இந்த டிட்வா புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக ஒரு சில, மிக தாழ்வான இடங்களில் நின்ற தண்ணீர் கூட மாநகராட்சி நிர்வாகம் மின்னல் வேகத்தில் ராட்சதமின் மோட்டாரை கொண்டு அந்த தண்ணீரை அகற்றியது மிகுந்த பாராட்டுதலுக்குரியதாகும். பேரிடர் கால நிவாரண பணிகளை திட்டமிட்டு வெற்றி கண்டுள்ள முதல்வரை விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பாராட்டுகிறது.