சென்னையில் இன்று முதல் சர்வதேச செஸ் போட்டி: 16ம் தேதி வரை நடக்கும்
சென்னை: சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியும் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் இப் போட்டிகள் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று முதல் ஆக. 16ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த 2 போட்டிகளிலும் தலா 10 முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியர்களை தவிர வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
மாஸ்டர்ஸ் பிரிவில் 10 கிராண்ட் மாஸ்டர்களும், இந்தியர்கள் மட்டும் களம் காணும் சேலஞ்சர் பிரிவில் 9 கிராண்ட் மாஸ்டர்களும், ஒரு சர்வதேச மாஸ்டரும் விளையாட உள்ளனர். கிராண்ட் மாஸ்டர்ஸ் பிரிவில் வீரர்களில் கார்த்திகேயன் முரளி, பிரணவ் வெங்கடேஷ் ஆகியோரும், சேலஞ்சர்ஸ் பிரிவில் எம்.பிரனேஷ், ஆர்.வைஷாலி, அதிபன் பாஸ்கரன், ஜி.பி.ஹர்ஷ்வர்தன் என 7 தமிழ்நாடு ஆட்டக்காரர்களும் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆண்டு சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கார்த்திகேயன் முரளி இந்த முறை மாஸ்டர்ஸ் பிரவில் களமிறங்குகிறார். அதே நேரத்தில் மாஸ்டர்ஸ் பிரிவின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் இந்த முறை விளையாடவில்லை. அதேபோல் முதல் சாம்பியன் குகேஷ் தொம்மராஜியும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. போட்டிகள் தினமும் பிற்பகலில் தொடங்கும். ரவுண்ட் ராபின் முறையில் 9 சுற்றுகளாக போட்டி நடைபெறும். மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாய்.