சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள எஸ்ஐஆர் உதவி மைய 08065420020 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: பொதுமக்கள் சந்தேகத்துக்கு உதவ நடவடிக்கை
சென்னை: எஸ்ஐஆர் குறித்து பொதுமக்களுக்கு எழும் கேள்வி, சந்தேகத்துக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் 08065420020 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபடும் திமுகவினர் மற்றும் பொதுமக்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., மேற்பார்வையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகிகள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களை 08065420020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை பெற்று முறையாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்ஐஆர் வார் ரூமில் 08065420020 என்ற எண்ணில் தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் 2002ம் ஆண்டில் வாக்களித்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றி குடியேறியிருந்தால், வாக்குரிமை தற்போது எந்த இடத்தில் அமையும்? மனைவியின் வாக்குரிமை அவரது சொந்த ஊரில் உள்ளது.
இப்போது உள்ள முகவரி ஆதாரமாக ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை என்ற இரண்டு ஆவணங்கள் மட்டுமே உள்ளன. இவை மட்டும் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள முடியுமா?. படிவத்தில் உறவினர் குறித்து தகவல் கட்டாயம் நிரப்ப வேண்டுமா?. கணக்கீட்டு படிவத்தில் தகவல்களை தவறாக பதிவிட்டால் மீண்டும் புதிய படிவம் வழங்கப்படுமா? என கேள்விகளை கேட்டு வருகின்றனர். மக்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் திமுக தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்ஐஆர் உதவி மைய எண் 08065420020 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்கத்தில் உள்ள 0 கட்டாயம் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.