சென்னை விமான நிலையம் செல்ல மதனந்தபுரம் வழியாக புதிய வழித்தடம்: புறநகரில் இருந்து நேரடியாக சரக்கு முனையத்தை இணைக்கும் சாலை
* விமான போக்குவரத்து ஆணையத்துடன் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆலோசனை
சென்னை: சென்னை, மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் விமானநிலையம் அமைந்துள்ளது. சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலபதிர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கானோர் தினமும் சென்னை உள்நாட்டு முனையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோன்று டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் போன்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, குவைத், லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்களும் சென்னை விமான நிலையத்தையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் விமானத்தில் வருபவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் வசதியாக இருக்கிறது. இதனால் அதிக பயணிகள் சென்னை விமான நிலையத்தையே விரும்புகின்றனர்.
இதன் காரணமாக, பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2015ம் ஆண்டில் 2.2 கோடி பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து 2025ம் ஆண்டில் 3.5 கோடியை நெருங்கியுள்ளது. இந்த எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் 2 கட்டங்களாக நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி, முதல்கட்ட பணிகள் ரூ.1,260 கோடியில் 1.49 லட்சம் சதுர மீட்டரிலும், 2ம் கட்ட பணிகள் ரூ.1,207 கோடியில் 86,135 சதுர மீட்டரிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2023 ஏப்ரல் மாதத்தில் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து 2ம் கட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் இந்த பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய வாய்ப்புள்ளது.
இதனால் விமான சேவை அதிகரிக்கும் நிலையில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்திற்கு அனைவரும் கிண்டி ஜி.எஸ்.டி சாலையை பயன்படுத்த வேண்டியிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.
இதனால் பயணிகள் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு செல்ல முடியாமல் விமானங்களை அடிக்கடி தவறவிட வேண்டிய நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம்- போரூர் சாலையில் இருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்து செல்லும் வகையில் புதிய மேம்பால சாலை அமைக்க விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னை விமான நிலையம் ஏற்கனவே மூன்று முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும் பொருட்களை உள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் கார்கோ விமான சேவைகளுக்கும் தனிமுனையங்கள் உள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், ஜி.எஸ்.டி, சாலை வழியாகத் தான் வர முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதைப்போன்று மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களும் கடும் சிரமமத்திற்குள்ளாகிறது. இவற்றை எளிமைப்படுத்தும் வகையில் ஐந்தாவது பயணியர் முனையம் அமைக்க, விமான நிலைய ஆணையம் முடிவு செய்து தாம்பரம் - போரூர் சாலை வழியாக விமான நிலையத்தின் மறுபுறம் இருந்து புதிய மேம்பால சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை விமான நிலைய ஆணையம் தற்போது தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த சாலை அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஜி.எஸ்.டி சாலையில் தற்போது ஏற்படக் கூடிய போக்குவரத்து நெரிசல் குறைய அதிகவாய்ப்புள்ளது. இதனால் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நேரம் மிச்சமாகும். அதைப்போன்று மற்ற ஊர்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் சிரமமின்றி விமான நிலையத்திற்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
குன்றத்தூர் - பல்லாவரம் சாலையை 4 வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான நிலஎடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலஎடுப்பு பணிகள் முடிவடைந்ததும் 24 மீ அலகத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படும். இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னை வெளிவட்ட சாலையிலிருந்து விமான நிலையத்திற்கு வாகனங்கள் செல்ல எளிதில் வந்து செல்லமுடியும்.
விமான நிலையத்திற்கு என வெளிவட்ட சாலையிலிருந்து மதனந்தபுரம் வழியாக விமான நிலையத்தை அடைவதற்கான புதிய சாலை அமைப்பதற்காக விமான நிலைய ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையத்தை சுற்றி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்களை மேம்பாட்டு பணிகளுக்காக விமான நிலையம் அடையாளம் காணப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 33 ஏக்கர் நிலம் வழங்கும்படி கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதனந்தபுரம் வழியாக மேம்பாலம் சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கையானது விவாதத்தில் உள்ளது. விரைவில் இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
* ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை விமான நிலையத்திற்கு புதிய மேம்பால சாலை அமைக்க திட்டம்.
* போரூர் - தாம்பரம் சாலை வழியாக விமான நிலையத்தை இணைக்கும் புதிய மேம்பால சாலை திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
* சென்னை வெளிவட்ட சாலையிலிருந்து நேரடியாக சரக்கு முனையத்தை இணைக்கும் புதிய வழித்தடம்.
* விமான நிலைய ஆணைய அனுமதி கோரி விண்ணப்பம்
* விமான நிலையத்தை சுற்றி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்களை மேம்பாட்டு பணிகளுக்காக அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு மாநில அரசிடம் கூடுதலாக 33 ஏக்கர் நிலம் வழங்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்தால் சாலையை விமான நிலைய ஆணையமே அமைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.