சென்னை விமான நிலையத்தில் இந்தோனேசிய ராணுவ விமானங்கள் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு
சென்னை: இந்தோனேசியா நாட்டு ராணுவ விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் திடீரென தரை இறங்கிவிட்டு, மீண்டும் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றது. இந்தோனேசியா நாட்டு ராணுவ விமானங்கள், நேற்று முன்தினம் ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு சென்று விட்டு, பின்பு மாலையில் மீண்டும் இந்தோனேசியா நாட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம், சென்னை வான்வெளியை நெருங்கிய போது, அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானிகளுக்கு ஓய்வு தேவைப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தை தரையிறக்கி, சில மணி நேரம் ஓய்வெடுத்த பின்பு மீண்டும் விமானத்தை இயக்க விமானிகள் முடிவு செய்தனர். அப்போது இந்தியாவின் சென்னை விமான நிலையம் அருகில் இருப்பதை அறிந்து, இந்தோனேசியா ராணுவ விமானத்தின் விமானிகள், டெல்லியில் உள்ள இந்திய விமான விமானப்படை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, விமானத்தை ஓய்வுக்காக, சென்னையில் தரையிறக்குவதற்கு அனுமதி கேட்டனர். டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தலைமை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, அந்த இந்தோனேசியா ராணுவ விமானம் சென்னையில் தரையிறங்க, அனுமதிக்கும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து அந்த ராணுவ விமானம் சென்னை பழைய விமான நிலைய பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் தரையிறங்கி, தனி விமானங்கள் நிற்கக்கூடிய, ரிமோட் பே பகுதியில் விமானத்தை நிறுத்தினார்கள்.
இந்தோனேசியாவை சேர்ந்த 3 ராணுவ விமானங்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரையில் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை பழைய விமான நிலையத்தில் வந்து அவசரமாக தரையிறங்கின. 35 பேர் இருந்தனர். நேற்று காலை மீண்டும் சென்னையில் இருந்து இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றனர். ஒரேநேரத்தில் மூன்று இந்தோனேஷியா ராணுவ விமானங்கள் அபுதாபியில் இருந்து, இந்தோனேசியா நோக்கி சென்ற போது, ஓய்வுக்காக ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு வந்து தரையிறங்கி விட்டு, நேற்று காலை ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இந்தோனேசியா சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.