சென்னையில் இன்று நடக்கவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
சென்னை: சென்னையில் இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துவதை கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், 17ம் தேதி(இன்று) காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20ம் தேதி(வியாழக் கிழமை) காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.